கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக..! அதிமுகவுக்கு ராமதாஸ் கொடுத்த லேட்நைட் ஷாக்..!

By Selva KathirFirst Published Sep 15, 2021, 12:11 PM IST
Highlights

சட்டப்பேரவையில் பாமக தரப்பில் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படவில்லை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்து கொண்டது. இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போவது தான் என்று பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் அண்மையில் அன்புமணியின் மகள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ராமதாஸ்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்தது. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பாமகவிற்கு அதிமுக தலைமை கொடுத்து வந்தது. இதன் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தே விலகிய போது கூட பாமக இருக்கிறது என்று தெம்பாக இருந்தார் எடப்பாடியார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகும் கூட பாமக விவகாரத்தில் அதிமுக தலைமை மிகுந்த கவனமாகவே இருந்து வந்தது. அன்புமணி ராமதாசை விமர்சித்தார் என்கிற ஒரே காரணத்திற்காக பெங்களூர் புகழேந்தியை அதிமுகவில் இருந்து நீக்கினார் எடப்பாடியார்.

இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டியது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கருதியது தான். ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு வழக்கம் போல் அதிமுகவிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தது பாமக. அதிலும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் கூட சட்டப்பேரவை செயல்பாடுகளில் அதிமுகவுடன் பாமக இணக்கம் காட்டவில்லை. இது பற்றி ஏற்கனவே பாமக தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி பலமுறை புகார் அளித்தும் கூட ராமதாஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், பாமக எம்எல்ஏக்கள் ஆளும் கட்சி எம்எல்ஏக்களே தோற்கும் அளவிற்கு ஸ்டாலின் புகழ் பாடினர்.

சட்டப்பேரவையில் பாமக தரப்பில் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படவில்லை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்து கொண்டது. இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போவது தான் என்று பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் அண்மையில் அன்புமணியின் மகள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, குடும்பத்துடன் சென்று சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் வழங்கினார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பினார் அன்புமணி.

அன்புமணி மகள் திருமண வரவேற்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சென்னையில் இருந்துமே கூட எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் அன்புமணி வீடு தேடிச் சென்று பத்திரிகை கொடுத்திருந்தார். இதற்கு காரணம் பாமக மீதான எடப்பாடியாரின் அதிருப்தி தான் என்கிறார்கள். சட்டப்பேரவையில் பாமகவின் செயல்பாடு திமுகவிற்கு சாதகமாக இருந்ததுடன் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அந்த கட்சி தலைமை பிடிகொடுக்கவில்லை.

இந்த சூழலில் தான் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று பின்னிரவு திடீரெ ஜி.கே.மணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் வட மாவட்டங்கள் ஆகும். இந்த ஏழு மாவட்டங்களிலும் பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் முழு பலத்தையும் காட்டினால் அடுத்து நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் பேரம் பேச முடியும் என்று ராமதாஸ் கணக்கு போட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழலில் கூட்டணிக்கு வருமாறு திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இந்த 9 மாவட்ட தேர்தலில் பாமக கணிசமான வெற்றிகளை பெறுவதுடன் வாக்கு வங்கியையும் தக்க வைத்துக் கொண்டால் நிச்சயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தரப்பிடம் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வரும் என்று ராமதாஸ் நம்புகிறார். தற்போதைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்று ராமதாஸ் கருதுகிறார். எனவே தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்துவிட்டு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மீன் பிடிக்க ராமதாஸ் தூண்டிலை தற்போது போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!