இதோடு அடங்கு.. அதிமுகவை சீண்டினால் பதிலடி கொடுப்போம்.. பாமகவை பகிரங்கமாக எச்சரித்து ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 12:05 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அந்த கட்சியின் முடிவு,  அதிமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்று முடிவு செய்வதும் அவர்களது உரிமை, ஆனால் அதற்காக அதிமுகவை அவர்கள் விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பாமகவுக்கு தான் பேரிழப்பு, 

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு அதிமுகவுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுப்பது அவர்கள் விருப்பம், ஆனால், அதற்காக அதிமுகவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பிறகு அதிமுகவும் பாமகவை விமர்சனம் செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சிமன்ற தேர்தல் தற்போது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. இந்நிலையில் இது அதிமுக-பாமக இடையே உரசலாக மாறியிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அந்த கட்சியின் முடிவு,  அதிமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்று முடிவு செய்வதும் அவர்களது உரிமை, ஆனால் அதற்காக அதிமுகவை அவர்கள் விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பாமகவுக்கு தான் பேரிழப்பு, அதிமுகவுக்கு அல்ல என்ற அவர், அதிமுகவை பாமக தலைவர் விமர்சனம் செய்தால் நாங்களும் பதிலுக்கு விமர்சனம் செய்வோம் என எச்சரித்தார். எழுதப்படாத  ஒப்பந்தம் போல் யாருடனாவது சேர்ந்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளது, திமுக கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் மொட்டையடித்து உள்ளது.  இதற்கான தாக்கம் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு தெரியும். மக்கள் அதிமுகவோடு இருக்கின்றனர் எனவே அதிமுகவுக்கு எந்த காலத்திலும் இழப்பு கிடையாது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என அவர் உறுதி அளித்தார். செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சினிமாவில் ஜாலியாக இருந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சட்டமன்றத்தில் அமர வைத்தால் எப்படி அவருக்கு மக்களின் பிரச்சினைகள் தெரியும், நிச்சயம் அவருக்கு போர் அடிக்கும், ஆட்சிக்கு வந்த உடன் நீட்டை ஒழிப்போம் என உதயநிதி கூறிவந்தார், இப்போது அந்த சேப்பாக்கம் சேகுவேரா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சரமாரியாக நக்கல் அடித்தார். 

 

click me!