'நீட்' யார் கொண்டு வந்தாங்கன்னு நான் சொல்லட்டுமா..? திமுக - அதிமுகவை டார் டாராக கிழித்த அன்புமணி !!

By Raghupati R  |  First Published Feb 16, 2022, 11:33 AM IST

நீட் தேர்வை கொண்டு வர 4 கட்சிகள் தான் காரணம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய பாமக உறுதுணையாக இருக்கும் என்றும் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.


சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் சேலம் கோட்டை பகுதியில் நேற்று இரவு நடந்தது.  இதில் பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது மிக, மிக முக்கியமான தேர்தலாகும். ஏனென்றால் மக்களிடம் நேரடியாக தொடர்பு உள்ளது. நகராட்சி அமைப்புக்கு என்று 18 அதிகாரங்கள் இருக்கிறது. மாநகராட்சி மேயர் பதவி என்பது வானூயர்ந்த அதிகாரம் படைத்தது. இதனால் சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த முறை பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 

Latest Videos

உங்களின் முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம். தமிழகத்தில் திமுக - அதிமுக ஆகிய 2 கட்சிகளும் கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் எந்த மாற்றமும், முன்னேற்றமும் கிடையாது. இதனால் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அந்த மாற்றம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இருந்து தொடங்கட்டும். சேலம் மாநகராட்சி தேர்தலில் பாமக வெற்றி பெற்று கட்சியை சேர்ந்தவர் மேயராக தேர்வு செய்யப்பட்டால் சேலத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு முதல் கையெழுத்து போடப்படும். 

அதன்பிறகு 2026-ல் நான் முதல் - அமைச்சராக வந்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு முதல் கையெழுத்தை போடுவேன். அந்த தைரியும் திமுக, அதிமுகவுக்கு கிடையாது, நமக்கு மட்டுமே உள்ளது. நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டு வந்தார்கள் ? என்று திமுகவும், அதிமுக வும் சவால் விடுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மீதும், அவர், இவர் மீதும் பழி சுமத்துகிறார்கள். 

நீட் தேர்வை யார் கொண்டு வந்தார்கள் என்ற விவாதத்திற்கு நானும் வருகிறேன். மக்களிடம் எடுத்து கூறுகிறேன் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மத்தியில் நான் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அப்போது, நான் அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டேன். 

அதன்பிறகு 2009-ம் ஆண்டு மத்திய மந்திரி பதவியில் இருந்து வெளியே வந்தபோது 2010-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாகவும், திமுகவை சேர்ந்த காந்திச்செல்வன் இணை மந்திரியாகவும் இருந்தபோது, நீட் தேர்வு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. பின்னர் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை கொண்டுவந்தார்கள்.

நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கும், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. நீட் தேர்வினால் சுமார் 50 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய பாமக உறுதுணையாக இருக்கும். திமுக தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 10 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அவர்களின் தேவைக்காக மக்களை பயன்படுத்தி கொள்வார்கள். 

அதன்பிறகு மக்களை மறந்துவிடுகிறார்கள். காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என இந்த 4 கட்சிகளும் தான் நீட் தேர்வு வருவதற்கு காரணமாகும். பாமகவுக்கு ஒரு மாற்றத்தை தாருங்கள். மக்களின் முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம். சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்’ என்று பேசினார்.

click me!