நாடளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்னமும் எந்த கூட்டணி பக்கம் செல்வது என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் பாமகவும், தேமுதிகவும் திணறி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு முதல் 3 மாதங்களாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ரகசியமாக தொடங்கிய நிலையில், இன்னும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யாமல் உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து இடங்களை அறிவித்து விட்டது. நாளைய தினம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
இழுபறியில் பாமக, தேமுதிக பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் இன்னும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாமக மற்றும் தேமுதிக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் முக்கியாமாக பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிகவிற்கு இரண்டு தரப்பிலும் இருந்து அழைப்பு வருவதால் எந்த பக்கம் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என பேரம் பேசி வருகிறது. மேலும் பிரேமலதா மற்றும் அன்புமணி ஆகியோர் ராஜ்யசபா சிட் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளனர். ஆனால் அதிமுக மற்றும் பாஜக தரப்போ அதற்கு வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது.
மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக
தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகளோடு அதிமுக முதல் கட்டம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தொடர்ந்து ரகசியமாகவே இரண்டு தரப்பும் பேசி வருகின்றனர். நேற்று கூட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரண்டு தரப்பும் நேரடியாக பேசாமல் ரகசியமாக பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருந்தே தேமுதிக மதில் மேல் பூனையாக இருப்பது தெரியவருகிறது.
மேலும் பாமகவை பொறுத்தவரை ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு செல்லலாம் என முடிவெடுத்துவிட்டார். ஆனால் அன்புமணியோ பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதனால் பாமகவும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் முடிவெடுக்கமுடியாமல் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் இன்றோ அல்லது நாளையோ தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்
கல்வியைக் காவிமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணைபோகிறார்? இதுதான் பாசிச எதிர்ப்பா? சீமான் ஆவேசம்!