மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை மாநில செயலாளர் அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
எதிர்வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் ஆனாலும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை மாநில செயலாளர் அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கமல்ஹாசனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் “ மாற்றத்திற்கான அரசியலில் கடந்த 3 ஆண்டுகள் தங்களுடனும் ம.நீ.ம உறவுகளுடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த 3 ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புகளை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுகளை பெற்றதில் மகிழ்ச்சி.
மிகுந்த மனவருத்தத்துடன் இப்பதிவிடுகிறேன் 🙏என்னுடன் பயணித்த மய்ய உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 pic.twitter.com/zCPvQ96MXU
— Anusha Ravi (@DrAnusharavi)
இருப்பினும் தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? முழு விவரம் இதோ..
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதிமுக, திமுக இரு கட்சிகளை கமல்ஹாசன் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும், சட்டமன்ற தேர்தலில் 2.5% வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும், தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் வெறும் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.