
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்துவருகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பலகட்டமாக தேர்தல் நடந்துவருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை 7 மணி முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். சேமல், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமாகியுள்ளது. அதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க சென்ற வாக்காளர்கள் அதிருப்தியடைந்தனர்.
மற்றபடி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துவரும் நிலையில், அனைவரும் வாக்களிக்குமாறு, குறிப்பாக இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த டுவிட்டர் பதிவில், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு சதவிகிதம் ரெக்கார்டு படைக்கும் விதமாக அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.