
சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் கட்டாயம் ஒரு முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என விமானநிலைய அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில் விமான நிலையத்தில் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மூன்று அலைகள் மக்களை பாதித்துள்ளது. 4வது அலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உச்சத்தை அடையலாம் என பல அமைப்புகள் கணித்துள்ளன.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று என்பது செங்குத்தான வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனாவால் உயிரிழப்பே இல்லை என்ற சூழல் உருவானது. கொரோனா நோய்த்தொற்று கணிசமாக குறைந்ததால், தமிழக அரசு நோய் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளையும் தளர்த்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மாஸ்க் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்க படாது என அரசு அறிவித்தது, இதனை அடுத்து தமிழகம் முழுவதும் மாஸ் அணிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே மாஸ்க் அணிவதை காண முடிகிறது. குறைந்து வந்த கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுண்டரில் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் கொடுக்கப்படுகிறது, மாஸ்க் அணியாமல் வந்தால் ஏன் மாஸ்க் அணிய வில்லை என்று கேட்டு மாஸ்க் அணிய வலியுறுத்தப்படுகிறது. பயணிகள் மட்டுமல்லாது பார்வையாளர்களும் விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் உட்பட அனைத்து பிரிவினரும் கட்டாயம் மாஸ்க் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்ததில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே கொரோனா வைரஸ் இந்தியாவை கடுமையாக பாதித்தது. அது போன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாவலர்கள் அனைவரும் மாஸ் அணியும்படி வற்புறுத்தியுள்ளது. இந்த மாஸ்க் அணியும் முறை மேலும் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.