அரசுப் பள்ளி மாணவர்கள் மீது திட்டமிட்டு அவதூறு.. கொந்தளிக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 2:01 PM IST
Highlights

அரசு பள்ளி மாணவர்கள் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வலியுறுத்தியுள்ளார். 

அரசு பள்ளி மாணவர்கள் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வலியுறுத்தியுள்ளார். இன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பெண் மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது. படிக்கும் மாணவிகள் இப்படி நடந்து கொள்வதா? இளம் தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்று பெற்றோர்கள், பொதுமக்கள் ஆதங்க குரல் எழுப்பி வருகின்றனர்.

அதேபோல் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது ஆசிரியர்களை தாக்க முற்படுவது வகுப்பறையில் உள்ள இருக்கைகள் மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது இது அனைத்துமே அரசுப்பள்ளிகளில் நடந்த அராஜகம் என வீடியோக்கள் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களின் டிசி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் அரசு பள்ளிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு நடந்தது அதில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் கல்வியை உயர்த்தும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கும் அரசு இது என்றும் அச் சங்கம் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் தற்போது உள்ள பொருளாதார நிலையில் 3 சதவீத அகவிலைப்படியை கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படுகிறது. அதேபோல் அரசு கொள்கை முடிவாக புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திமுக அரசை நம்பி இருக்கிறோம்.

நிச்சயம் முதல்வர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பணி மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்சனை உடனே சரி செய்யப்பட வேண்டும், பயிற்றுனர் காலிப் பணியிடங்களை கண்டறிந்த அதை நிரப்பிட வேண்டும், மாணவர்கள் தவறு செய்தால் அவர்களின்  சான்றிதழில் பதிவு செய்தால் அவர்கள் வருங்காலத்தில் சமூக விரோதிகளாக மாறுவார்கள். ஆகையால் அதனை அமைச்சர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும், அரசு பள்ளி மாணவர்கள் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது இதுதொடர்பான வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இது போல ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட வேண்டும், என்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 
 

click me!