
கம்யூனிஸத்தின் முக்கிய அடையாளம் எளிமை! ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள் தலைமை காம்ரேட்கள். இப்போது இந்த தேசத்திலிருக்கும் முக்கிய கம்யூனிஸ தலைவர்களில் எளிமையும், ஏழ்மையும் கொண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் தோழர் நல்லகண்ணு.
சி.பி.ஐ.யின் தேசியக்குழு உறுப்பினராக இருக்கும் நல்லகண்ணு திருப்பூரில் பேசியபோது தேர்தல் அரசியல் மற்றும் மக்கள் அரசியலை நோக்கு விதம் பற்றி நொந்து போய் பேசினார் இப்படி...!
“இந்த தேசத்தில் மட்டும்தான் மதம் அதிகமாக உள்ளது. ஜாதிகளும் ஆறாயிரத்துக்கும் மேல் உள்ளது. மற்ற நாடுகளில் இப்படியில்லை. இந்த சாதிகளை, மதங்களை மையமாக வைத்து பல கட்சிகள் இங்கே இயங்குகின்றன.
நாடு சுதந்திரமடைந்த பிறகு மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்கையில் தனக்கு பிடித்தது கட்சியா அல்லது வேட்பாளரா அல்லது சின்னமா? எது என பார்த்து அதனடிப்படையில் வாக்களித்தனர். படிக்காத மக்கள் கூட தெளிவாக இருந்தனர் இந்த விஷயத்தில்.
ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டில் என்றில்லை இந்த தேசம் முழுவதுமே தேர்தல் முடிவுகளை பணமே தீர்மானிக்கிறது என்றாகிவிட்டது. இது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை சீரழித்துவிட்டது. ஆர்.கே.நகரில் இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது.
பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கையில் தோற்பது மக்கள்தான். பணத்தால் அமையும் வெற்றியின் மூலம் மோசமான ஆட்சி நிர்வாகம்தான் கிடைக்கும். அது மக்களை பாதாளத்துக்குள் தள்ளிவிடும்.” என்று வருந்தி நடுங்கியிருக்கிறார். நியாயம்தானே!