
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக இன்று சட்டசபைக்கு சென்றார்.
இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதன்முறையாக சட்டசபைக்கு சென்ற தினகரன், ஆளுநரின் முழு உரையையும் கவனமாக கேட்டார். தனது முதல் கூட்டத்தை முழுமையாக முடித்துவிட்டு வந்தார் தினகரன்.
வெளியே வந்த தினகரன், ஆளுநரின் உரையில் உள்ள குறைகளையும், அவரது உரையில் இடம்பெறாத கருத்துகளையும் லிஸ்ட் போட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசை ஆளுநர் ஆதரிப்பது ஜனநாயக படுகொலை என தினகரன் விமர்சித்தார்.
மேலும் ஆளுநரின் உரையையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து பேசினார். கூடங்குளம் அணு உலை பிரச்னை, ஓகி புயல் பாதிப்பு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க மானியம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்த கருத்தை தினகரன் தெரிவித்தார்.
முதன்முறையாக சட்டசபைக்கு சென்ற தினகரன், பேண்ட்- சட்டை அணிந்து சென்றார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை வேஷ்டி சட்டைதான் ட்ரெஸ் கோடாக உள்ளது. தமிழர்களின் கலாச்சாரம் என்பதை விட, வெள்ளை வேஷ்டி சட்டை என்றாலே அரசியல்வாதிகளின் அடையாளமாக மாறிப்போய்விட்டது.
சாதாரணமாகவே வேஷ்டி சட்டை போடும் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சொல்லவா வேண்டும்..? சட்டசபைக்கும் வெள்ளை சட்டையுடன் போவதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், இன்று முதன்முறையாக சட்டசபைக்கு சென்ற தினகரன், பேண்ட்-சட்டை அணிந்து சென்றார். அனைவரையும் போல இல்லாமல், தான் எப்போதும் எப்படி இருப்பாரோ அதேபோல் பேண்ட் சட்டையுடன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.