
ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இருந்தும் திமுக வெளிநடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. அரசுக்கு வருவாய் குறைந்து நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதை ஆளுநர் உரையின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் நிதிச்சுமையை ஈடுசெய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.
கடன் சுமை குறித்து ஒருவரி கூட ஆளுநர் உரையில் இல்லை. உரை தொடங்கியதுமே ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசு தயாரித்த உரையைத்தான் ஆளுநர் படித்தாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது என ஆளுநரின் உரையை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.