தமிழகத்தில் ராகுல் போட்டி? கிளம்பிய வதந்தியால் குழம்பிய காங்கிரஸார்..!

By Asianet TamilFirst Published Jan 18, 2019, 4:36 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட போகிறார் என்ற செய்தியை யார் கிளப்பிவிட்டது என்ற குழப்பத்தில் காங்கிரஸார் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட போகிறார் என்ற செய்தியை யார் கிளப்பிவிட்டது என்ற குழப்பத்தில் காங்கிரஸார் இருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுவரும் ராகுல் காந்தி, மூன்று முறை உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். உ.பி.யில் இந்த முறை மாயாவதி - அகிலேஷ் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையிலும், அமேதி, ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்துவிட்டார்கள். இந்த முறையும் ராகுல், அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்திவருவதாகவும் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அழைத்து பேசிய ராகுல், தமிழகத்தில் சாதகமாக உள்ள இரண்டு தொகுதிகளின் பெயர்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு ப. சிதம்பரம் தன்னுடைய சொந்தத் தொகுதியான சிவகங்கை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை டிக் செய்து கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின. திமுக கூட்டணியில் இந்த இரு தொகுதிகளிலும் சுலபமாக வெற்றி பெறலாம் என்று ராகுல் சொல்லியிருப்பதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எதையும் யோசிக்காத சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் இந்த செய்தியைத் தொகுதி முழுவதும் பரப்பியும் வருகிறார்கள். ஆனால், இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கூறுகிறார்கள். இதுபற்றி காங்கிராஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “உண்மையில் தமிழகத்தில் ராகுல் போட்டியிட்டால் மகிழ்ச்சிதான்.

 

ஆனால், அப்படி ஒரு செய்தி மேலிடத்திலிருந்து வரவில்லை. இது வதந்திதான். இதை எங்கிருந்து கிளம்பியது என்று எங்களுக்கு புரியவில்லை. ராகுல் எங்கே போட்டியிடுவார் என்பதை மேலிடம் அறிவித்த பிறகே தெரியவரும்” என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடப் போவதாக செய்தி கிளம்பியது. பிரபல இதழில்கூட இதைப் பற்றி அட்டைப் படக் கட்டுரை வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. தேர்தல் காலத்தில் வரக்கூடிய வதந்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும் என்றே கருத வேண்டியிருக்கிறது.   

click me!