தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்! அதிருப்தியில் புலம்பும் முக்கிய நிர்வாகிகள்!

By vinoth kumarFirst Published Oct 21, 2018, 9:38 AM IST
Highlights

தி.மு.கவில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நிர்வாகிகள் அதிருப்தி ஏற்பட்டு வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது.

தி.மு.கவில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நிர்வாகிகள் அதிருப்தி ஏற்பட்டு வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தி.மு.கவிலேயே தொகுதிப் பங்கீடே கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் மு.க.ஸ்டாலின் திடீரென தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அனைத்து கட்சியினரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளார். 

வழக்கமாக தேர்தல் என்றால் தொகுதிப் பங்கீடு தொடங்கி பிரச்சாரம் வரை தி.மு.கவில் வளவளா குழ குழா தான் வழக்கம். வேட்பு மனு தாக்கல் முடியும் தருவாயிலும் கூட தொகுதிப் பங்கிடு முடிந்த பாடிருக்காது. ஆனால் தலைவர் பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பழையை பாணியை ஓரம் கட்டிவிட்டு புதிய பாணியை கடை பிடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் ஒரு அம்சமாகவே ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேரை பொறுப்பாளராக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் ஸ்டாலின். மற்ற கட்சியினர் இந்த அறிவிப்பை ஆச்சரியத்துடன் பார்த்தாலும் தி.மு.கவில் உடனடியாக புகைச்சல் ஆரம்பித்துள்ளது. அதுவும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தான் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தி குறித்து ஆதரவாளர்களுடன் பேச ஆரம்பித்துள்ளனர். 

தேர்தல் பொறுப்பாளர்கள் மூலமாகத்தான் தேர்தலுக்கு செலவு செய்யப்படும் என்பதால் பலரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் தொகுதி பொறுப்பாளர்களாக செயல்படும் யாருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்த்து காத்திருந்த சிலர் பொறுப்பாளர்களாக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் அவர்கள் அதிருப்தியை புலம்பலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தே.மு.தி.கவில் எம்.எல்.ஏவாக இருந்து சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தி.மு.கவில் இணைந்த இரண்டு பேரில் ஒருவர் சேலம் தொகுதியில் எம்.பியாக வேண்டும் என்கிற கனவில் இருந்தார். ஆனால் அவரை தேர்தல் பொறுப்பாளராக்கி அந்த கனவை காலி செய்துள்ளது தி.மு.க மேலிடம். இதே போல் தனித் தொகுதி ஒன்றின் எம்.பியாக இருந்தவர், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

மீண்டும் தனக்கு அதே தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை வேறு ஒரு தொகுதிக்கு பொறுப்பாளர் ஆக்கியுள்ளார் ஸ்டாலின். இதே போல் அண்மையில் தி.மு.கவில் இணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதி வி.ஐ.பி ஒருவரும் எம்.பி சீட் ஆசையில் இருந்தார். ஆனால் அவருக்கும் பொறுப்பாளர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரியில் எம்.பியாக இருந்தவரும் வரும் தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகும் கற்பனையில் இருந்தார்.

ஆனால் அவருக்கும் பொறுப்பாளர் பதவி தான் என்று தி.மு.க மேலிடம் கைவிரித்துள்ளது. தி.மு.கவின் உயர் பொறுப்பில் உள்ள பெண் ஒருவரும் எம்.பியாகும் கனவில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கும் பொறுப்பாளர் பதவி தான் என்று டாடா காட்டியுள்ளது மேலிடம். இதனிடையே பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதால் எம்.பி தேர்தலில் சீட் கிடைக்காது என்று யாரும் புலம்ப வேண்டாம் என்றும் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சமதானம் கூறப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!