
தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சசிகலா செய்த மிகப்பெரிய தவறு என அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதிலிருந்து மதுசூதனன், பொன்னையன் போன்ற மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் மற்ற மூத்த நிர்வாகிகளும் தொடர்ச்சியாக அவர்கள் சார்ந்த அணிக்கு ஆதரவாக எதிரணியை விமர்சித்து பேசிவந்தனர்.
ஆனால் அதிமுகவின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வந்ததில்லை.
இந்நிலையில், 6 மாத அமைதிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தது மிகப்பெரிய தவறு எனவும் குடும்ப அரசியல் நடத்த முயன்றதே சசிகலாவின் தோல்விக்குக் காரணம் எனவும் விமர்சித்தார்.
கட்சியும், ஆட்சியும் இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் தான் இருப்பதாகவும் ஆட்சியில் நீதிமன்றங்கள் அதிகமாக தலையிடுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுவது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.