
வள்ளல் கூட்டத்தை உருவாக்க முயன்று வருவதாகவும் ஆர்வக்கோளாறில் பதவிக்காக அரசியலுக்கு வந்துவிட்டேன் என ரசிகர்கள் நினைக்க வேண்டாம் எனவும் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் ட்விட்டர் அரசியலை விட்டு களத்தில் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்பு வெள்ளம் பாதிக்க கூடிய அளவில் உள்ள ஏரிகளை பார்வையிட்டார்.
அதைதொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், தற்போது, கேளம்பாக்கத்தில் பிறந்தநாள் விழா மற்றும் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் 39 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, வள்ளல் கூட்டத்தை உருவாக்க முயன்று வருவதாக தெரிவித்தார். ஆழிப்பேரலை போன்ற இயற்கையின் சீற்றத்திற்கு ஏழை, பணக்காரர் வித்தியாசம் தெரியாது எனவும் பணக்காரர் முறையாக வரி செலுத்தினாலே நாடு முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நலனுக்காக 37 ஆண்டுகள் கையேந்தி வருவதாகவும் மக்கள் நலனுக்காக கையேந்துவதில் தவறு ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆர்வக்கோளாறில் பதவிக்காக இதையெல்லாம் செய்கிறேன் என ரசிகர்கள் நினைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வருமுன் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம் என்று கமல் வேதனை தெரிவித்துள்ளார்.
எத்தனை பேர் மிரட்டுகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் அல்ல என்றும் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.