வாய்க்காலை கூட தூர்வாரல.. எல்லா தண்ணியும் வயலுக்கு வந்துருச்சு..! 400 கோடி என்ன ஆனது? விவசாயிகள் ஆவேசம்..!

 
Published : Nov 05, 2017, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
வாய்க்காலை கூட தூர்வாரல.. எல்லா தண்ணியும் வயலுக்கு வந்துருச்சு..! 400 கோடி என்ன ஆனது? விவசாயிகள் ஆவேசம்..!

சுருக்கம்

delta district farmers sad and angry

நாகை மற்றும் திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரததே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வாய்க்கல்களைக்கூட தூர்வாரவில்லை. குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி நிதி என்ன ஆனது? எனவும் விவசாயிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த 6 நாட்களாக நாகை, திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழ்வேளூர், தரங்கம்பாடி, நன்னிலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் 15,000 ஏக்கர் விளைநிலத்தில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறையை சுற்றியுள்ள 25,000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியதால் விவசாயிகள் விவரிக்க முடியாத அளவிற்கு பாதிப்படைந்தனர். இந்த ஆண்டாவது விளைந்துவிடும் என்ற நம்பிக்கையில், குறுகிய கால பயிரான சம்பா சாகுபடி செய்திருந்தனர்.

விதைத்த சில நாட்களில் மழை இல்லாமல், பணம் கொடுத்து தண்ணீர் இறைத்து பயிரை வளர்த்துவந்துள்ளனர். பயிர் வளர்ந்துவரும் சமயத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து, பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கரி பரப்பிற்கும் மேலான சம்பா பயிர்கள் மூழ்கிவிட்டன. அதிகமான தண்ணீர் தேங்கியுள்ளதால் வடிக்க சிரமப்படும் விவசாயிகள், ஏற்கனவே 5 நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தண்ணீர் வடிய மேலும் 5 நாட்கள் ஆகும் என்பதால் கண்டிப்பாக பயிர்கள் அழுகிவிடும் என கண்ணீர் சிந்துகின்றனர்.

வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வயல்களுக்குள் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் தண்ணீர் ஓடியிருக்கும். அப்படி செய்யாததால்தான் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது என விவசாயிகள் கதறுகின்றனர்.

நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, மயிலாடுதுறை, கீழ்வேளூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நன்னிலம் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கிவிட்டன. 

கடந்த ஆண்டே வறட்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், இந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இனிமேல் பார்வையிட்டு மட்டும் என்ன பயன் என கேள்வி எழுப்பும் விவசாயிகள், பயிர்கள் மூழ்கியதற்குக் காரணம் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததுதான் என திட்டவட்டமாக குற்றம்சாட்டுகின்றனர்.

பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 400 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியிருந்தார். ஆனால், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியே இருக்காது எனவும் 400 கோடி என்ன ஆனது? எனவும் விவசாயிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த ஆண்டு வறட்சியால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தமிழகம் முழுவதும் தற்கொலை செய்துகொண்டனர். 

கடந்த ஆண்டு வறட்சியால் வேதனைக்குள்ளான விவசாயிகள், இந்த ஆண்டு, கனமழையால் பயிர்கள் மூழ்கி வேதனைப்பட்டு கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டிருந்தால், முறையாக நீர்நிலைகளை தூர்வாரியிருக்க வேண்டும். ஆனால் நிதி மட்டும் ஒதுக்கப்பட்டது. குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!