
கடந்த 5 நாட்களில் சென்னையில் 56.6 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் மழைநீர் தேங்கியிருந்த 315 இடங்களில் 200 இடங்களில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு விட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டை விட்டு மக்கள் வெளி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையெங்கும் தண்ணீர் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிடோர் பல்வேறு இடங்களில் ஆய்வு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையால் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
22 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டது எனவும் 167 இடங்களில் மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 5 நாட்களில் சென்னையில் 56.6 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் மழைநீர் தேங்கியிருந்த 315 இடங்களில் 200 இடங்களில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.