எடப்பாடிக்கு போதிய அனுபவமும் ஆற்றலும் இல்லையென்ற தெரிவித்தவர், இதன் காரணமாக நடைப்பெற்ற மூன்று தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடித்ததாக அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் தலைமையை நிராகரிக்கும் மக்கள்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் பண்ருட்டி ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அதிமுக இன்று ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளது, நெருக்கடியில் இருந்து மீட்க ஓ.பன்னீர் செல்வம் பாடுபடுகிறார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அனைவரது கடமை என தெரிவித்தார். அதிமுக நெருக்கடிக்கு காரணம் தலைமையினால் ஏற்படும் நெருக்கடி என தெரிவித்தார். போதிய அனுபவமும் ஆற்றலும் இல்லையென்ற தெரிவித்தவர். இதன் காரணமாக நடைப்பெற்ற மூன்று தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடித்ததாக கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது தான் பொருள் எனவும் தெரிவித்தார். எடப்பாடிக்கு தலைமை பண்பு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புதிய தலைமை தேவை
அதிமுகவின் இக்கட்டான இந்த நேரத்தில் கட்சியை காப்பாற்ற அனைவரையும் அரவனைத்து செல்லும் தாயுள்ளம் கொண்ட தலைமை தேவை, எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து தலைமை பொறுப்பில் இருந்து அரசியலை நடத்துவதாகவும் அது கட்சிக்கு ஆபத்து என தெரிவித்தார். இந்த நேரத்தில் கட்சியை காப்பாற்ற வேண்டியது கடமை. மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் தற்போது இல்லை, எனவே நல்ல கொள்கைகளை மூலம் இதனை சரி செய்யலாம். அதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் தான் எஜமானர்கள். கட்சி முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டது என எனக்கு தெரியாது. எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளுக்கு ஓ.பி.எஸ் இடையூறாக இருந்ததில்லை , எதிர்ப்பு தெரிவித்தால் கட்சி பிளவுபடும் என அமைதி காத்தார். இப்போது ஒத்து போக முடியாத சூழலில் தான் ஓ.பி.எஸ் தற்போது விலகியுள்ளார். இந்த நேரத்தில் தலைமையை மாற்றுவதே சரி. கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. மக்கள் முடிவு தான் சரி. மேல் நாடுகளில் தேர்தல் தோல்விக்கு பிறகு பொறுப்பேற்று தலைமையில் இருந்து விலகுவார்கள். மக்கள் முடிவுகளுக்கு மதிப்பளிப்பார்கள். எனவே இந்தநிலையில் இனி மக்களை சந்தித்தால் தொடர் தோல்வி தான் கிடைக்கும்.
பாஜகவிற்கு பலன் கிடைக்கும்
முதலில் கட்சியை சரி செய்வது முக்கியம். அதன் பின் தான் மக்களின் ஆதரவை பெற முடியும். அதிமுகவில் தற்போதைய போக்கு நீடித்தால் கட்சி அழியும். நீதிக்கட்சி எப்படி அழிந்ததோ அப்படி அழியும். கட்சியை மீட்க தொண்டர்கள் தலைவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உண்டு. அதிமுகவின் தற்போதைய போக்கால் திமுகவுக்கு எதிர்ப்பில்லை பா.ஜ.க வுக்கு பலன் அளிக்கும். திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் , அதிமுகவில் இருக்கும் பிரச்சனைகளால் அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க கூடும் புதிய வாக்காளர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்தும் வெற்றி தோல்விகள் அமையும் என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
‘மெட்ராஸ் ஸ்டேட்’டூ ‘தமிழ்நாடு’ அறிஞர் அண்ணாவின் முத்தான முதல் 15 சாதனைகள்...