அதிமுக மேலிடத்தை அதிர வைத்த ஓபிஎஸ் இளைய மகன்..! எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகம்?

By Selva KathirFirst Published Jan 29, 2021, 10:51 AM IST
Highlights

சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பூரண குணம் அடைந்து மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்று ஓபிஎஸ் இளைய மகன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிமுக மேலிடத்தை மட்டும் அல்ல தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பூரண குணம் அடைந்து மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்று ஓபிஎஸ் இளைய மகன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிமுக மேலிடத்தை மட்டும் அல்ல தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.

இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்று கூறி அந்த அறிக்கையை ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வெளியிட்டிருந்தாலும், அதனை தற்போதைய அரசியலுடன் ஒப்பிட்டு பேசாமல் இருக்க முடியாது. பெங்களூருவில் கொரோனா சிகிச்சையில் உள்ள சசிகலா பூரண உடல் நலம் பெற்று குணமாகி அறம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஜெயபிரதீப் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். திருமதி சசிகலா நடராஜன் என்று ஜெயபிரதீப் கூறியிருந்தால் சிறையில் இருந்து அவர் வெளியே வந்திருப்பதை அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததற்காக அதிமுகவின் நெல்லை மாவட்ட பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தற்போது துணை முதலமைச்சருடன் ஓபிஎஸ்சின் இளையமகனுமான ஜெயபிரதீப்பே சசிகலா குணமாகி வர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அரசியல் பதிவல்ல என்று அவர் கூறியிருந்தாலும் சசிகலாவை வரவேற்று அவர் இப்படி ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி தான் பலர் மனதில் எழுந்துள்ளது. முடிந்த அளவிற்கு சசிகலாவிற்கு ஊடக வெளிச்சமே கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் எடப்பாடி தரப்பு கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியான இரண்டே நாளில் அவர் தொடர்புடைய ஒரு அறிக்கையை வெளியிட்டு மீண்டும் ஊடக வெளிச்சத்தை சசிகலா பக்கமாக திருப்பியுள்ளார் ஓபிஎஸ் இளைய மகன். அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் அல்லாமல் தன்னுடைய மீடியா ரிலேசன் டீம் மூலமாக அந்த விவரத்தை அனைத்து தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தியாக வரவழைக்கும் செயலிலும் ஜெயபிரதீப் ஈடுபட்டுள்ளார். இதனால் தான் இதில அரசியல் இல்லை என்று ஜெயபிரதீப் கூறினாலும் அரசியல் இருக்கிறது என்று கூற வேண்டியுள்ளது.

சசிகலா என்பவர் தீய சக்தி என்றும் அவரிடம் இருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே தர்மயுத்தம் தொடங்கியதாக செல்லும் இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் சூளுரைத்தார். சசிகலா மட்டும் அல்ல அவருடைய குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அதிமுகவில் மறுபடியும் இடமில்லை, ஒரு குடும்பத்திடம் மறுபடியும் அதிமுகவின் அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்றும் ஓபிஎஸ் பேசி வந்தார். இதே போல் சசிகலா தரப்பில் இருந்தும் ஓபிஎஸ்சை துரோகி என்றும், டயர் நக்கி என்றும் மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த சூழலில் ஜெயபிரதீப் எதற்காக சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்?

சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து அதுவும் அவர் சிறை தண்டனை நிறைவு பெற்ற பிறகு இப்படி ஒரு அறிக்கையை வெளியிட காரணம் என்ன? இவற்றுக்கு எல்லாம் பதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கத்தான் என்கிறார்கள். அதிமுகவில் மறுபடியும் சசிகலா வரக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். அதிமுகவை இரண்டாக உடைத்ததாக ஓபிஎஸ் மீது ஒரு விமர்சனம் உள்ளது. அதே போல் சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் என்கிற விமர்சனமும் ஓபிஎஸ் மீது உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி Vs சசிகலா என்று இந்த பிரச்சனையை திருப்பவே ஓபிஎஸ் தரப்பு இப்படி காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள்.

மேலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் எடப்பாடி தனியாக எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது, தொகுதி ஒதுக்கீடு முதல் கூட்டணி பேரம் வரை அனைத்தையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்க்கிறது. எனவே ஒத்துவரவில்லை என்றால் தங்களுக்கு சசிகலா என்கிற ஒரு ஆப்சன் உள்ளது என்பதை தெரியப்படுத்தவே ஓபிஎஸ் தரப்பு ஜெயபிரதீப் மூலமாக இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!