
ஆட்சி பழனிசாமிக்கு.. கட்சி பன்னீர்செல்வத்துக்கு என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இருவரின் அணிகளும் இணைந்தன.
முதல்வராக பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இரு அணிகளும் இணைந்து தினகரனை ஓரங்கட்டினர். தற்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் பழனிசாமி தரப்பும் தினகரன் தரப்பும் இறங்கியுள்ளது.
இதற்கிடையே, பன்னீர்செல்வம் தரப்பை முதல்வர் பழனிசாமி புறக்கணிப்பதாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை எனவும் பேச்சு அடிபட்டது. ஆட்சி மட்டும் போதாதென்று கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முதல்வர் பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.
பழனிசாமியின் புறக்கணிப்பால் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். துணை முதல்வர் என்ற பதவி பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கப்பட்டாலும் பெயரளவிலேயே அந்த பதவியில் இருக்கிறார். அதிகாரங்கள் அனைத்தும் பழனிசாமி இடத்திலேயே உள்ளன.
இதற்கிடையே பிரதமரைச் சந்திக்க சென்ற பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் தங்கமணியை அனுப்பிவைத்தார் முதல்வர் பழனிசாமி.
பிரதமருடன் பன்னீர்செல்வம் தனியாக அரசியல் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை உறுதி செய்வதற்காகவும் ஸ்பையாக அனுப்பப்பட்டார் தங்கமணி. ஆனால் பிரதமரைச் சந்திக்க செல்லும்போது அமைச்சர் தங்கமணியை கழற்றிவிட்டு தனது ஆதரவாளரான மைத்ரேயனை மட்டுமே அழைத்து சென்றார் பன்னீர்செல்வம்.
இதனால் பழனிசாமி அதிருப்தி அடைந்தார். எனினும் பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வத்தின் நகர்வுகள் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்பார்த்த அளவுக்கான முக்கியத்துவம் கிடைக்காததால் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆளுநர் பதவியேற்பு விழாவில்கூட மேடையில் அமரவைக்கப்படாமல், பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் அமரவைக்கப்பட்டார். இந்த சம்பவமும் பன்னீர்செல்வத்தின் ஆதங்கத்தை அதிகப்படுத்தியது.
ஆட்சி மட்டும் போதாது.. கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
எனவே பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்க வாய்ப்பிருப்பதாகவே கிசுகிசுக்கப்படுகிறது. எனவே பன்னீர்செல்வத்தை எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதா நினைவிடத்தில் எதிர்பார்க்கலாம். ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்துவிட்டு மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்குவதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.