
தமிழகத்தில் அரசு ஆணையிட்டாலும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியாது என்றும், மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே நடகோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு அம்பிகா என்ற பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அரசு ஆணையிட்டாலும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த முடியும் எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை எனவும் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார்.