
2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது.
2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. அதன்பிறகு காங்கிரஸால் மீண்டெழ முடியவில்லை என்றே கூற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்தே பாஜகவை வீழ்த்த முடியவில்லை. அதேபோல உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து வீழ்ச்சியாக சந்தித்துவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது இரண்டு வெற்றிகளை ருசித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதி எம்.பியாக இருந்த வினோத் கண்ணா மறைவை தொடர்ந்து, அங்கு கடந்த கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுஜில் ஜகார், 1,93,219 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க 2-வது இடத்தையும், ஆம் ஆத்மி 3-வது இடத்தையும் பிடித்தன.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள வேங்கரை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 23,310 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 65,227 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பஷீருக்கு 41,917 ஓட்டுகள் கிடைத்தன. பா.ஜ.க வேட்பளார் ஜனசந்திரனுக்கு வெறும் 5,728 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
காங்கிரஸின் இந்த வெற்றி, அக்கட்சித் தலைவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் சென்று 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா காங்கிரஸ்?