
மாணவர்கள் போராட்டத்தை முறையாக கையாளத் தவறி, திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர், மாநில உளவுத்துறை தலைவர், மாநகர உளவுத்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை:
ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றதும், அவர்களை எல்லாம் மாணவர்களும், இளைஞர்களும் பத்திரமாக பாதுகாத்ததும் நாடு முழுவதும் பாராட்டப்பட்டதை அதிமுக அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமையே தவிர, அறவழி போராட்டத்தை கலைக்க காவல்துறையே “சட்ட விரோத செயல்களில்” ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக தமிழுணர்வுக்காக, தமிழர்களின் பண்பாட்டிற்காக போராடியவர்களை “தேச விரோதிகள்” என்றும் “சமூக விரோதிகள்” என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்திருப்பதை இந்த நேரத்தில் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏழு நாட்களாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல், மாடியில் நின்று “பைனாக்குலர்” மூலம் கூட்டத்தைப் பார்வையிட்டு தன் பொறுப்பை தட்டிக் கழித்த மாநகர காவல்துறை ஆணையர், தமிழர் கலாச்சாரத்திற்கு போராடியவர்களைப் பார்த்து இப்படி சரமாரியாக குற்றம் சாட்டுவதற்கு மட்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில் மிகப்பெரிய உள்நோக்கம் தெரிகிறது.
அறவழி போராட்டத்திற்குள் சமூக விரோதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்றால் மாநில உளவுத்துறை அதிகாரிகளும், ஏழு நாட்கள் காவல் காத்து நின்ற போலீஸ் அதிகாரிகளும் என்ன செய்தார்கள்? அவர்களை அடையாளம் கண்டு ஏன் கைது செய்யவில்லை? மாநகர காவல்துறைக்கு என்றே இருக்கின்ற உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி தமிழர்களின் பண்பாட்டு உரிமையை, கலாச்சார உரிமையை வென்று எடுத்து விட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்காக போராட்டத்தில் “சமூக விரோதிகளும்” “தேச விரோதிகளும்” புகுந்து விட்டார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அபாண்டமாக பழி சுமத்தி, போராட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
அதனால்தான் வரலாறு காணாத காவல்துறையினரின் இந்த மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய அராஜக தாக்குதல்கள் குறித்து பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்றைய தினம் ஆளுனர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறேன்.
ஆகவே 23 அன்று மெரினா கடற்கரை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உடனடியாக விசாரணை கமிஷனை அமைக்க மாண்புமிகு ஆளுனர் அவர்கள் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இதற்கிடையில் அமைதியான மாணவர்கள் போராட்டத்தை முறையாக கையாளத் தவறி, திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர், மாநில உளவுத்துறை தலைவர், மாநகர உளவுத்துறை பொறுப்பில் உள்ள அதிகாரி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து நியாயமான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும்.
அதே சமயத்தில், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் போலீஸ் தடியடி நடைபெற்ற இடங்கள், ஆட்டோவுக்கு போலீஸார் தீ வைத்த இடம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.