சிவகங்கைக்கு செக் வைக்கும் சிதம்பரம்... மண்ட காய்ச்சலில் கோஷ்ட்டி தலைகள்!!

By sathish kFirst Published Feb 14, 2019, 10:25 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிவகங்கைத் தொகுதி காங்கிரஸுக்கு தான் ஆனால், அங்கு போட்டியிடப்போவது யார் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. எப்படியும் தன மகனுக்கு வாங்கிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் சிதம்பரம்.

திமுக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கைத் தொகுதியை குறிவைத்து பூத் கமிட்டிகளுக்கான வேலைகளை முடித்து ஆட்களையும் தயார் நிலையில் வைத்துள்ளார். 35,000 செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டிகளில் வேலை செய்யக்கூடியவர்களின் பெயர், ஆதார் விவரங்கள், வாக்காளர் அடையாள அட்டை விவரம், செல்போன் நம்பர் ஆகியவற்றை கார்த்திக் சிதம்பரம் தனது லேப்டாப்பில் வைத்திருப்பதோடு அவர்களுடன் தொடர்பிலும் இருந்து வருகிறார்.

ஆனால், காங்கிரஸ் போட்டியிடப் போவதாகக் கூறப்படும் வடமாவட்டங்களில் எந்தத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளுக்குக்கூட ஆட்களைத் தயார் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் கிளை, வார்டு, நகர, வட்டார, ஒன்றியங்களில் பொறுப்பாளர்கள் இல்லை என்பதுதான் வேடிக்கையானது என்கிறார்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு செக் வைக்கும் வகையில் ஏ.கே.அந்தோணி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுக் குழு, காங்கிரஸ் தலைவர் ராகுல்-ன் ஆலோசனைப்படி  அவசர சுற்றறிக்கையை உயர்மட்ட பொறுப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எம்.பி சீட் கேட்பவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.

சீட் கேட்பவர்களின் குடும்பத்திலிருந்து யாரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கக் கூடாது, ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பவர்கள் எம்.பி சீட் கேட்கக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. ராஜ்யசபா எம்.பி.யாக சிதம்பரம் இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது சிதம்பரம் போன்ற மூத்தத் தலைவர்களுக்கு செக் வைக்கும் விதமாக அமைந்துள்ளது என்கிறார்கள் காங்கிரஸ் கோஷ்ட்டி தலைகள்.

click me!