கூட்டணி பேச்சுவார்த்தை! கனிமொழி மூலம் ஸ்கெட்ச் போடும் சுதீஷ்!

By Selva KathirFirst Published Feb 14, 2019, 9:41 AM IST
Highlights

அ.தி.மு.கவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட்டணிக்காக தி.மு.கவின் கதவை தட்டும் நடவடிக்கையில் தே.மு.தி.க இறங்கியுள்ளது.

அ.தி.மு.கவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட்டணிக்காக தி.மு.கவின் கதவை தட்டும் நடவடிக்கையில் தே.மு.தி.க இறங்கியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் வரை தே.மு.தி.கவை கூட்டணிக்கு வருமாறு கலைஞரே நேரடியாக அழைப்பு விடுத்து பார்த்தார். மேலும் விஜயகாந்திற்காக வழிமேல் விழி வைத்து கலைஞர் காத்திருந்தார். ஆனால் கூட்டணிக்கு விஜயகாந்த் தரப்பு போட்ட கன்டிசன்கள் ஸ்டாலினை டென்சனாக்கியது. இதனால் தே.மு.தி.க தரப்புடனான கூட்டணி பேச்சுவார்த்தையையே முறித்துக் கொண்டார் ஸ்டாலின். 

அதன் பிறகு மக்கள் நலக்கூட்டணி உருவாகி அதனை நம்பி சென்ற விஜயகாந்த் நடுத்தெருவில் நின்றது தான் மிச்சம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு தி.மு.க தரப்பில் இருந்து தே.மு.தி.கவிற்கு எந்த அழைப்பும் செல்லவில்லை. ஆனால் இந்த முறை தி.மு.கவின் அழைப்பை எதிர்பார்த்து தே.மு.தி.க மேலிடம் ஏங்கிக் கிடக்கிறது. ஸ்டாலினிடம் நேரடியாக பேச தயங்கிய சுதீஷ் முதலில் தனக்கு நெருக்கமான எ.வ.வேலு மூலமாக பேசிப் பார்த்தார். ஆனால் கடந்த காலங்களில் எ.வ.வேலு அணுகிய போது தே.மு.தி.க எப்படி நடந்து கொண்டதோ அதே பாணியில் இந்த முறை எ.வ.வேலு நடந்து கொண்டார். 

இதனால் தே.மு.தி.க தரப்பால் ஸ்டாலினை ரீச் செய்ய முடியவில்லை. அதே சமயம் கடந்த முறை தே.மு.தி.கவை தி.மு.க கூட்டணிக்கு கொண்டு வர தயாநிதி மாறன் அரும்பாடுபட்டார். ஆனால் இந்த முறை விஜயகாந்த் தரப்பே நேரடியாக தொடர்பு கொண்டும் மாறன் தே.மு.தி.கவை பொருட்படுத்தவில்லை. இதற்கு காரணம் ஸ்டாலின் தே.மு.தி.கவிற்காக பேசுவதை விரும்பமாட்டார் என்கிற அச்சம் தான் என்கிறார்கள். 

இந்த நிலையில் வேறு வழியே இல்லாமல் சுதீஷ், கனிமொழி தரப்பை அணுகியதாக கூறுகிறார்கள். கூட்டணியில் எங்களுக்கு எல்லாம் இடம் இருக்கிறதா? என்று தே.மு.தி.க தரப்பில் இருந்து கனிமொழியிடம் பேசப்பட்டதாக சொல்கிறார்கள். தி.மு.கவை பொறுத்தவரை தே.மு.தி.கவிற்கு இன்னும் 5 விழுக்காடு வாக்குகள் உறுதியாக இருப்பதாக நம்புகிறது. ஸ்டாலின் விரும்பவில்லை என்றாலும் கூட ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர் பா.ம.க வரவில்லை என்றால் தே.மு.தி.கவை வைத்துக் கொள்ளலாம், வட மாவட்டங்களில் அந்த கட்சிக்கு சிறிது செல்வாக்கு உண்டு, பா.ம.கவை சமாளிக்க தே.மு.தி.க தேவைப்படும் என்று கருதுகிறார்கள். 
 
இப்படி ஒரு பேச்சு இருப்பது கனிமொழி காதுகளுக்கும் எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் சுதீஷ் தரப்பில் இருந்து கனிமொழியை அணுகியதாக கூறுகிறார்கள். ஆனால் கனிமொழி தரப்போ எந்த உறுதிமொழியும் அளிக்காமல் அண்ணனிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்வதாக பதில் அளித்துள்ளதாக கூறுகிறார்கள். ஸ்டாலின் அனுமதிக்கும் பட்சத்தில் தே.மு.தி.கவுடன் கனிமொழி நேரடியாக பேச வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

தே.மு.தி.க தரப்பிலோ அ.தி.மு.கவுடன் சென்று நிற்கும் தொகுதிகள் அனைத்திலும் தோற்பதற்கு தி.மு.கவுடன் சென்றால் கிடைக்கும் தொகுதிகளில் வெல்லலாம் என்கிற ஒரு நம்பிக்கை மேலோங்கி உள்ளது. இருந்தாலும் பாதாளத்தில் இருக்கும் தே.மு.தி.க போன்ற ஒரு கட்சியை உயரச் செய்ய ஸ்டாலின் விரும்புவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

click me!