எம்.பி தேர்தலில் யாருக்கு ஆதரவு? ரசிர்களுடன் ஆலோசிக்க ரஜினி முடிவு..!

By Selva KathirFirst Published Feb 14, 2019, 9:59 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் மன்றத்தில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் மன்றத்தில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்த போதே சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்று அறிவித்தார் ரஜினி. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அந்த சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னும் 15 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அரசியலில் முழுவதுமாக இறங்கவில்லை என்றாலும் தேர்தலில் தனது மக்கள் மன்ற நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளதாக ரஜினி கருதுகிறார். 

தேர்தலில் போட்டியில்லை என்கிற முடிவில் ரஜினி உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் தேர்தலில் தனது நிலைப்பாட்டை ரஜினி மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு ரஜினியை ஆதரவை பெறுவதில் மிகத் தீவிரமான லாபி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி இறுதியானதும் ரஜினியை ஆதரிக்குமாறு நேரில் சந்தித்து பேசக்கூட அ.தி.மு.க தரப்பில் ஒரு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கான ஏற்பாட்டை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க பிரபலம் செய்து வருவதாக சொல்கிறார்கள். வெளிப்படையாகவே ரஜினியிடம் பா.ஜ.க ஆதரவு கோரிவிட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் ரஜினி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும் மக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்களை போட்டியிட ரஜினி அனுமதிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 

தேர்தலில் ரஜினி ரசிகராக களம் இறங்க அனுமதிக்க வேண்டும் என்று சிலர் நேரடியாக ரஜினிக்கே கடிதம் எழுதியுள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றால் குழப்பம் வரும் என ரஜினி கருதுகிறார். எனவே அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர்களையும் அழைத்து பேச ரஜினி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். 

ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்கள் அல்லது ஆறு மாவட்டங்கள் என்கிற ரீதியில் ஒரு வாரம் கருத்து கேட்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ரஜினி தனது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்க ஏற்பாடு தயாராகி வருவதாகவும் சொல்கிறார்கள். மகள் திருமணம் முடிந்த குஷியில் உள்ள ரஜினி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முடிவை எடுப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் வழக்கம் போல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவே ரஜினி இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்த தெரிவித்து வருகின்றனர்.

click me!