
அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, அனைவராலும் மாற முடிகிறதோ, இல்லையோ, அரசியல் வாதிகள் மட்டும் மாறி விடுகின்றனர்.
அதை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தேர்தல் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவர்கள் பயன்படுத்தும் உத்திதான், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வாக்குகளை பெறுவதாகும்.
வாக்காளர்களுக்கு பணமோ, பரிசு பொருளோ கொடுத்தால், தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும். மேலும் தேர்தலையே நிறுத்துவதற்கும் வாய்ப்பு உண்டு.
இந்நிலையில், பிலிப் கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம், தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை விநியோகம் செய்து வருவதாக பன்னீர் தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.
வாக்காளர்கள் பலரது, பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்துக்கொண்டு, அவர்களுக்கு தேவையான பொருட்களையும் குறிப்படுத்துக்கொண்டு, அதற்கான மொத்த பணத்தையும் ஆன்லைன் நிறுவனங்களில் தினகரன் தரப்பு செலுத்தி விட்டது.
அதை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள், தொகுதி முழுவதும் வாக்காளர்கள் பலருக்கு பரிசு பொருட்களை விநியோகித்து வருகின்றன என்று பன்னீர் தரப்பு புகார் அளித்துள்ளது.
வாக்காளர்கள் தங்கள் பெயரில் பணம் செலுத்தி ஆர்டர் செய்தது போல, இந்த திட்டம் செயல் படுத்தப் படுவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சிரமம்.
எனவே, இந்த திட்டம் தினகரன் தரப்புக்கு நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இதை தேர்தல் ஆணையம் எப்படி தடுத்து நிறுத்தப்போகிறது என்று தெரியவில்லை