
தமிழக அரசியல்வாதிகளில் சமூக வலைதளங்களில் அநியாயத்துக்கு ஓட்டப்படும் நபர்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் முக்கிய இடமுண்டு.
ஜெயலலிதாவின் சமாதியின் முன் அவர் தியானத்தில் அமர்ந்தது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் பிணம் போன்ற பொம்மையை வைத்து பிரச்சாரம் செய்தது, உள்ளிட்ட சில விஷயங்களை வைத்து ஓட்டு ஓட்டென அவரை ஓட்டித் தள்ளுவார்கள்.
ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரது பணிவை பார்த்து ‘பணிவு, பவ்யத்துக்கு மறு பெயர் பன்னீர்’ என்று பாராட்டிய தமிழகம்தான் அவரை இப்போது இந்த வாரு வாரிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பன்னீரை பற்றி நல்லவிதமாக பேச ஒன்றுமே இல்லையா?...என கேட்டால்! நிச்சயமாக இருக்கிறது என்று ஒரு பாயிண்டை அள்ளிப் போடுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
“அம்மா இருக்கும் போதிருந்த அதே பணிவு இன்னைக்கு வரைக்கும் அண்ணன் கிட்டே அப்படியேதான் இருக்குது. அன்னைக்கு அம்மாவிடம் பவ்யமா இருந்தவரு இன்னைக்கு யாரிடம் பவ்யத்தை காட்டுறார் தெரியுமா?.” என்று புதிர் போடுபவர்கள் பின் ‘வேற யாரிடம், தமிழக மக்களிடம்தான்.’ என்று சொல்லி சிலிர்ப்பவர்கள் கூடவே ஒரு பிட்டை அள்ளிப் போட்டனர்.
அதாவது...சமீபத்தில் தன் குடும்பம் சகிதமாக இராமேஸ்வரத்துக்கு சென்றிருந்தார் பன்னீர்செல்வம். அப்போது அங்கிருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதற்காக சாதாரண பக்தர்களை போல் டிக்கெட் எடுத்துத்தான் நீராடியிருக்கிறார். அதேபோல் தீர்த்தங்களில் நீராடி முடித்த பின், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தீர்த்தம் இறைத்து ஊற்றிய நபர்களுக்கு கணிசமான தொகையை அன்பாக கொடுத்து அசத்தினாராம்.
இந்த மாநிலத்தோட துணை முதல்வர் அவர். அவரு நினைச்சா மேளதாளம் முழங்க படாடோபமா ஒவ்வொரு தீர்த்தத்துக்கும் போயி நீராடலாம். ஆனால் பன்னீரய்யா சிம்பிளா நடந்துகிட்டதை வெச்சே தெரியலையா! அவரு இன்னமும் பணிவின் மறு உருவமா இருக்கிறது?!’ என்று சிலிர்க்கிறார்கள்.