ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் தொகுதியில் இபிஎஸ்க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை தலைமை போராட்டம்
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிளவாக அதிமுக பிரிந்துள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தில் கூட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கையெழுத்திடாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை அதிமுக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தையும், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தையும் போட்டி போட்டு அழித்து வருகின்றனர். இரண்டு பிளவாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. அந்த கூட்டத்தில் இபிஎஸ் ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ பொதுக்குழு செல்லாது என அறிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டத்தை நடத்த முடியாது என கூறியுள்ளது.
சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை
இபிஎஸ்க்கு எதிராக போராட்டம்
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் மொத்தமுள்ள 75 அதிமுக மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 69 மாவட்ட செயலாளர்களும், ஓபிஎஸ் தரப்புக்கோ 6 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதே போல பொதுக்குழு உறுப்பினர்கள் என்று பார்க்கும் போது 2500க்கும் மேற்பட்டவர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் ஆர்பாட்டம் நடைபெறும் அதிமுகவினர் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் தனது தொகுதி மக்களின் செல்வாக்கு என்ன என ஓபிஎஸ் காட்டுவார் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100க்கும் குறைவான நபர்களே போராட்டத்தில் கலந்து கொண்டது ஓபிஎஸ்சை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
7 நிமிடங்கள் மட்டுமே போராட்டம்
இந்த போராட்டத்தில் கழகத்தைக் காட்டி கொடுத்த எட்டப்பன் எடப்பாடி ஒழிக, மூணு சீட்டு முனுசாமி ஒழிக என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமையாக வர வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வலியுறுத்தி போடி நகர அதிமுக சார்பாக நகரச் செயலாளர் பழனி ராஜன் தலைமையில் தேவர் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டனர். அதுவும் 7 நிமிடங்கள் மட்டுமே போராட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ்-ன் சொந்த தொகுதியான போடியில், பெரும்பாலும் போடியில் உள்ள அலுவலகத்தில் தான் ஓபிஎஸ் இருப்பார். இந்த நிலையில் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட போடி நகராட்சியில் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு 110 பேர் மட்டுமே வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் 14 பேர் மட்டுமே வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர் எனவே இது ஓ.பி.எஸ்.க்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்
டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !