சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க 69 மாவட்ட செயலாளர்களும் 2400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டது.
எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்
கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக தமிழக சட்டபேரவை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் இபிஎஸ் தரப்பு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் கூறுகையில், அதிமுகவின் சட்ட விதிகளின்படி அதிமுகவில் முடிவு எடுப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர்களாக உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்து போட்டுக் கொடுக்கும் கடிதம் மட்டுமே செல்லுபடியாகும் என கூறினார். போட்டி மனப்பான்மையில் இபிஎஸ் தரப்பு தவறான நடவடிக்கை எடுத்து உள்ளது. தற்போது சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு கடிதம் கொடுத்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் கடிதம் கொடுப்போம் என தெரிவித்தார். எனவே இது சட்டப்படி அங்கீகாரம் பெறாது என்றும் இந்த செயல் போட்டி மனப்பான்மைக்கு தான் வழிவகுக்கும் என கூறினார்.
புதிய கட்சியை தொடங்கும் சசிகலா? பதறும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. அதிமுக என்னவாகும்?
சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்
இதனிடையே சட்டப்பேரவை தலைவருக்கு கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது என்றும், பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால், இபிஎஸ் தரப்பு மனுக்கள் அனுப்பினால் அதை நிராகரிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி சபாநாயகரிடம் கடிதத்தை இன்று கொடுத்துள்ளார்.
சட்ட ரீதியாக முடிவு-அப்பாவு
இந்த கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, எஸ்.பி.வேலுமணி கொடுத்த கடித்தத்தை படித்து பார்த்த பிறகே சட்டரீதியாகவும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கடிதம் மூலமாக உரிய விளக்கம் கேட்பார் என்றும் நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதால் அதையும் கருத்தில் கொண்டு தான் சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் சட்டப்பேரவை வட்டராங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள்