ஜெயலலிதா நலம் பெற திருப்பதி ஏழுமலை கோவிலில் அமைச்சர் ஓபிஎஸ் தரிசனம்

First Published Dec 3, 2016, 11:17 AM IST
Highlights


தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருமலை திருப்பதிக்கு நேற்று சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்றுடன் 73வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி பெண் நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பிசியோதெரபி சிகிச்சை மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண உடல் நலம் பெற வேண்டும் என தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஜெயலலதா பூரண குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து, நேற்று திருமலை திருப்பதி ஏழுமலையார் கோவிலுக்கு சென்றார். இரவு திருமலைக்கு சென்ற அவர், பத்மாவதி ஓய்வு விடுதியில் தங்கினார். இன்று காலையில் விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்ற அவருக்கு, கோவில் அதிகாரிகள் தரிசனத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், ரங்க நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் படித்து தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கினர்

click me!