எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை - விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

First Published Dec 2, 2016, 12:08 PM IST
Highlights


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கும் அதே நேரத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலை கழகம்  முறைகேடாக பணம் பெற்று சேர்க்கை நடத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவரது அறிக்கை:

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பணம் கொடுத்து ஏமாந்த அனைவரும், அதற்கான ஆதாரங்களுடன் சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி 123 பேரிடம் ரூ.84.27 கோடியை  வசூலித்த மதன், அந்த பணத்தை பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். 

பணம் கொடுத்து ஏமாந்த  மாணவர்களின் பெற்றோர்களும் பச்சமுத்துவை சந்தித்ததாகவும், அவர் கூறியதன் அடிப்படையிலேயே மதனிடம் பணம் கொடுத்ததாகவும் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

 தொடர்ந்து நடந்த விசாரணையில் இம்மோசடி தொடர்பாக பச்சமுத்து  கைது செய்யப்பட்டார். மோசடி செய்யப்பட்ட தொகைக்கு ஈடாக ரூ.75 கோடியை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ததையடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

அப்போது பச்சமுத்து வைப்பீடு செய்த பணத்திலிருந்து தான் ஏமாந்த மாணவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் தெளிவாகியுள்ள மற்றொரு விஷயம் என்னவென்றால்,  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் நடைபெறவில்லை; பணத்தின் அடிப்படையில் தான் நடைபெற்றுள்ளன என்பது தான்.

 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பெயருக்கு ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு எந்த மரியாதையும் தரப்படுவதில்லை. மாறாக அதிக பணம் கொடுப்பவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதாக ஆவணங்களை தயாரித்து அவர்களுக்கு மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட  படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்திய மருத்துவக்குழு (MCI), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) ஆகிய உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும். 

இந்த முறைகேடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன என்பதால் இதை உயர்கல்வித்துறை மோசடியாக கருதி, அதுபற்றி தமிழக அரசும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

click me!