எடப்பாடிக்காக ஓபிஎஸ்யை சந்திக்க மறுத்த மோடி.? அதிமுகவின் கூட்டணிக்காக இன்னும் காத்திருக்கிறதா பாஜக.?

By Ajmal Khan  |  First Published Jan 2, 2024, 3:57 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்றும் 3 முதல் 4 மாத காலமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இன்று தமிழகம் வந்த மோடியை, ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சந்திப்பு நடைபெறாதது கேள்வியை எழுப்பியுள்ளது. 


அதிமுகவும்- ஜெயலலிதா மரணமும்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் இன்னும் ஓயாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. ஆரம்பத்தில் சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். இதனையடுத்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் சிறைக்கு செல்ல நேரிட்டதால் அந்த இரண்டு பேரையும் ஒதுக்கிவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தோடு இணைந்து தமிழத்தில் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தினார்கள். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தலான 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

Tap to resize

Latest Videos

அதிமுகவில் அதிகார மோதல்

இதனையடுத்து அதிமுகவின் இரட்டை தலைமை தான் தொடர் தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக  ஒற்றை தலைமை முழக்கம் எழுந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு குரல் எழுப்பினார். இதனையடுத்து மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் வலுத்தது. தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளாராக நியமித்தது செல்லும் என தீர்ப்பு வெளியானது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தனித்து விடப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து எடப்பாடிக்கு எதிராக தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வேண்டாம்.. நிதியுதவி தான் வேண்டும்.. டிடிவி.தினகரன்..!

பாஜகவுடன் கூட்டணி முறிவு

ஆனால் இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியது. இதனால் தமிழகத்தில் புதிய கூட்டணியை பாஜக அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தங்கள் அணி இருக்கும் என ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் சந்திப்பு நடைபெறவில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்திக்கவே பாஜக விரும்புவதாகவே தகவல் கூறப்படுகிறது. 

மோடி ஓபிஎஸ் சந்திப்பு

ஓபிஎஸ் உடன் இந்த சந்திப்பு நடைபெற்றால் எடப்பாடி அணி அதிருப்தி அடைய கூடும் என்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெறவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில்  தமிழகத்தில் பாஜக தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் ஐஜேக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை கூட்டணி உடன்பாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அதிமுகவும் தேமுதிக, பாமக,  தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தங்களது பக்கம் இணைக்க திட்டம் தீட்டி வருகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகத்திற்காக முதல்வர் அடுக்கிய கோரிக்கை.. மோடி,மோடி என எதிர்குரல் எழுப்பிய பாஜக தொண்டர்கள்.. அசராத ஸ்டாலின்
 

click me!