தமிழகத்திற்காக முதல்வர் அடுக்கிய கோரிக்கை.. மோடி,மோடி என எதிர்குரல் எழுப்பிய பாஜக தொண்டர்கள்.. அசராத ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jan 2, 2024, 1:55 PM IST

பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது பாஜக தொண்டர்கள் மோடி... மோடி என முழக்கமிட்டனர். இதன் காரணமாக கூட்டத்தில் அதிகளவு சப்தம் எழுந்தது. அப்போது பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்தை அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டார். இருந்த போதும் சத்தம் நீடித்து கொண்டே இருத்தது. ஆனால் இதனை கண்டு கொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையை தொடர்ந்தார். 


திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Tap to resize

Latest Videos

 

அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளியின் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை" மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்திருக்கிறார்.  திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம் இதை மேலும் தமிழ்நாடு அரசு 318 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீனமயப்படுத்த 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2,302-44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

தென் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம்,கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் ஆன்மீகப் பயணமாக வருகிறார்கள்.  பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கிறார்கள். அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் கனிவோடு பரிசீலிக்க வேண்டுகிறேன். மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளோடு தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கொண்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, சென்னை பினாங்கு சென்னை டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அதோடு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்குப் 'பங்குப் பகிர்வு மாதிரி" அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீப காலமாக, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அடுத்து, திருச்சி மாவட்டத்தின் MSME நிறுவனங்கள்தான் "பெல்" பொதுத்துறை நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை வழங்கிக் கொண்டு வந்தார்கள்.

தற்போது பெல் நிறுவனத்திடம் இருந்து இவர்களுக்கு கேட்பாணை (Procurement Order) மிகவும் குறைந்துவிட்டது. இதனால் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் MSME நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைத்து இருக்கிறார்கள். எனவே, பெல் (BHEL) நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவன செய்யப்பட மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிந்த ஒன்றுதான் கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது எனவே, அவற்றை "கடுமையான இயற்கைப் பேரிடர்கள்" என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோமே என்று எண்ண வேண்டாம்! பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து, கல்வி மருத்துவம் அவசியத் தேவைகள் உதவிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டிய முக்கியக் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மாநிலத்திற்காக கோரிக்கை வைப்பதும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிகைகள்தானே தவிர அவை, 'அரசியல் முழக்கங்கள் அல்ல அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.  

முன்னதாக முதலம்மைச்சர் தனது பேச்சை தொடங்கிய தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்த போது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் மோடி, மோடி என விண்ணை முட்ட முழக்கமிட்டனர். பாரத் மாதா கி ஜே எனவும் முழக்கிமிட்டனர். இதனால் கூட்டத்தில் அதிகளவு சத்தம் எழுந்தது. அப்போது பிரதமர் மோடி கை அசைவு மூலம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். இருந்த போதும் தொடர்ந்து மோடி முழக்கம் அதிகரித்தது. 

click me!