ஓபிஎஸ் அவரது மகன் ரெண்டு பேருமே என்னாலதான் ஜெயிச்சாங்க.. இல்லன்னு சொல்ல முடியுமா.? மார்தட்டும் ஜான் பாண்டியன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2021, 10:53 AM IST
Highlights

ஓபிஎஸ் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்று எம்பியானதற்கும் இந்த ஜான்பாண்டியன்தான் காரணம், இதை அவர்களால் மறுக்க முடியுமா.? தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறவில்லை என ஓபிஎஸ்சால் அறிக்கை விட முடியுமா.?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சாக இருந்தாலும் சரி அவரது மகன் ரவீந்திரநாத்தானாலும் சரி அவர்கள் இருவரும் வெற்றி பெறுவதற்கு தான்தான் காரணம் என தமிழ்நாடு மக்கள்  முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதை ஓபிஎஸ் மற்றும் அவரது மகனால் மறுக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்று எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜான்பாண்டியன். தனது தோல்விக்கு அதிமுகதான் காரணம் எனவும் தற்போது குற்றம் சாட்டியுள்ளார் இது அரசியில் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

தேவேந்திரகுல வேளாளர் மக்களின் அரசியலை முன்னெடுத்து வருகிறார் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், பட்டியல் வெளியேற்றம் என்பது அவரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில் பல்லர், குடும்பர், காலாடி, உள்ளிட்ட பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜான்பாண்டியன் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், அதில் மிக மோசமான தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக விட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி வைத்துள்ள தன்னை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் திட்டமிட்ட எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்து தன்னை தோல்வியடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட்டால் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் வளர்ச்சி அடையும் என்பதால் ஓபிஎஸ் இபிஎஸ் இவ்வாறு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார், கூட்டணி தர்மத்துடன் அதிமக வெற்றிக்கு தாங்கள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அதிமுகவினர் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு எதிராக உள்ளடி வேலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட தொகுதி தருவதாக கூறி வந்த ஓபிஎஸ் கடைசிவரை எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் எனக்கு துரோகம் செய்து விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஓபிஎஸ்சுக்காக தான் அவருடைய தொகுதியில் பிரச்சாரம் செய்ததாகவும், அதனால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வசிக்கும் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார் எனவும், அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்கு தங்களுடைய வாக்குகள் தான் காரணம் என்றும் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்று எம்பியானதற்கும் இந்த ஜான்பாண்டியன்தான் காரணம், இதை அவர்களால் மறுக்க முடியுமா.? தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறவில்லை என ஓபிஎஸ்சால் அறிக்கை விட முடியுமா.? ஆனால் நான் சொல்லுவேன் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோரால் நான் தோல்வி அடைந்தேன், எங்களால் அவர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்று என்னால் சொல்ல முடியும் என தனது ஆதங்கத்தை  வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுக என்பது இரட்டை தலைமையுள்ள கட்சி, அதனால் அந்த கட்சியின் மீது அந்த கட்சித் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை, இரட்டைக் தலைமையால் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் எனக்கு எதிராக உள்ளடி வேலை செய்த அதிமுகவினர் மீது நான் பலமுறை புகார் செய்தேன், ஆனால் இதுவரை ஒருவர் மீது கூட அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் அந்த  கட்சித் தலைமைகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!