அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலமைப்பித்தன் காலமானார்..!

By Thiraviaraj RMFirst Published Sep 8, 2021, 10:23 AM IST
Highlights

அதிமுக-வின் முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் (86) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
 

அதிமுக-வின் முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் (86) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

பாடலாசிரியரும், எழுத்தாளருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை புலமைப்பித்தன் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர் கவிஞர் புலமை பித்தன். 

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் பிறந்தார். இளமைக் காலத்தில் இரவில் பஞ்சாலையில் பணி, பகலில் பேரூர் தமிழ்க்கல்லூரியில் படிப்பு என 1961ல் புலவர் பட்டம் பெற்றார். திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூரில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் துவங்கிய இவர் முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நான் யார் நான் யார் நீ யார்…’என்ற பாடலை எழுதி வரவேற்பை பெற்றார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 4 முறை பெற்ற இவர், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக்கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். புலவர் புலமை பித்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இறவாப் புகழ்கொண்ட பாடல்களைத் தந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் நின்றவர். 

click me!