எதிர்க்கட்சிகளால் குறைக்கூட சொல்ல முடியவில்லை.. மு.க. ஸ்டாலின் ஆட்சியை ஆஹாஓஹோவென பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

By Asianet TamilFirst Published Nov 14, 2021, 8:18 PM IST
Highlights

அண்மையில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பெற்ற விருதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்  காட்டி பார்த்திபன் வாழ்த்து பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் குறை சொல்லக்கூட முடியாத அளவுக்கு நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் பாராட்டியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் திருப்பதிக்கு வந்திருந்தார். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக ஆட்சியைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பார்த்திபன்ப், “தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சிகளால் குறை சொல்லக்கூட முடியாத அளவுக்கு  நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை மக்களும் பாராட்டி வருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார். 

பின்னர் பார்த்திபனிடம் அவருடைய புதிய படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பார்த்திபன், “ ‘ஒத்த செருப்பு’ படத்தைத் தொடர்ந்து ‘இரவின் நிழல்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறேன். இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.” என்று பார்த்திபன் தெரிவித்தார். திமுக ஆட்சியை பார்த்திபன் நேரடியாகப் பாராட்டியிருப்பது சினிமா வட்டாரங்களில் உற்று நோக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன், புதிய கட்சி தொடங்க யோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

 “புதிய கட்சி தொடங்கலாமா என்று நானும் பலமாக யோசனை செய்து கொண்டிருக்கிறேன். இப்படி சொல்லி வைத்தால், சினிமாவில் ஒரு பரபரப்பு ஆகிக்கொண்டே இருக்கலாம். விஜய் கூட வரப்போகிறார் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால் நாமும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாமே என்றும் சிந்திக்கிறேன். நான் தொடங்கும் கட்சிக்கு பெயரெல்லாம் வைத்துவிட்டேன். கட்சியின் பெயர் 'புதிய பாதை'. இதுவரை எந்த மேடையிலும் இதை சொல்லவில்லை. எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று தெரியாது.” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பார்த்திபன். 

தற்போது திமுக ஆட்சியைப் பாராட்டிப் பேசி கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அண்மையில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பெற்ற விருதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்  காட்டி பார்த்திபன் வாழ்த்து பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

click me!