எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் அம்போ..? ஓபிஎஸ் இடத்தில் திண்டுக்கல்காரர்கள்.? இபிஎஸ் சாய்ஸ் யார்?

By Asianet TamilFirst Published Jul 17, 2022, 1:00 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டால், அவருக்கு பதில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்றுவிட்டார். பொதுச்செயலாளர் பதவியேற்றவுடன் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் ஓபிஎஸ்ஸின் மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப் உள்பட 17 பேரை கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி  நீக்கினார். இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 22 பேரை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். 

இதையும் படிங்க: ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !

அதன் தொடர்ச்சியாக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். அதே வேளையில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 22 பேரை கட்சியிலிருந்து  நீக்கி ஓ. பன்னீர்செல்வமும் அறிவிப்பு வெளியிட்டார். மாறி மாறி நீக்க அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற உள்ளது. அதிமுகவில் உள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் உள்பட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என 3 பேர் மட்டுமே ஓபிஎஸ்ஸுடன் உள்ளனர். இவர்களை அதிமுகவிலிருந்து நீக்கி ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இன்றையக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.யை கட்சியை விட்டு நீக்காத இபிஎஸ்.. ஓபிஎஸ்ஸுக்கு டாடா காட்டினாரா ஆர். தர்மர்.?

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் நீக்கப்பட்டால், அந்த இடத்தில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சியில் பொருளாளர் பதவியிலிருந்து ஒபிஎஸ் நீக்கப்பட்ட உடன் அந்த இடத்தில் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதேபோல கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எனவே, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு இவர்கள் மூவரிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், இப்பதவிக்கு கே.பி. முனுசாமி பரிசீலிக்கப்படமாட்டார் என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அந்தப் பதவி வழங்கப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ போன்ற முக்கியமானவர்கள் இதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த வகையில் சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன் அல்லது நத்தம் விஸ்வநாதன் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஓபிஎஸ் ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அது தன்னுடைய பரிசீலனையில் இருப்பதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாவம் அவங்க.. எப்போ ஜெயிப்பாங்களோ? ஓபிஎஸ் தரப்பை கிழித்த திண்டுக்கல் சீனிவாசன்

அது ஒரு பக்கம் இருக்க, இன்றைய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து விவாதிக்கப்படாமல் போகலாம் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மட்டும் பேசப்படும் என்றும் இன்னொரு தகவலும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இன்று மாலை இதுதொடர்பாக விவரங்கள் முழுமையாகத் தெரிந்துவிடும்.

click me!