
சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி எனவும், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இணைந்து செயல்படுவோம் எனவும் புதிதாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ள ஒ.பி.எஸ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஒ.பி.எஸ்ஸிடம் இருந்து சசிகலா தரப்பினர் ஆட்சியை பிடுங்கி கொண்டனர். இதனால் கோபமுற்ற ஒ.பி.எஸ் அதிமுகவை இரண்டாக உடைத்தார்.
ஒ.பி.எஸ்க்கு அதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் என பெரும்பாலோர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், பொதுமக்களிடம் நியாயம் கேட்டு ஒ.பி.எஸ் களத்தில் குதித்தார். இதில் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்றார் ஒ.பி.எஸ்.
தொடர்ந்து சசிகலா தரப்புக்கு ஒ.பி.எஸ் தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம், ஜெயலலிதா மரணம், என பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் உண்மையான அதிமுக நாங்களே எனவும், கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதில் கடும் போட்டி நிலவியதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற கட்சியின் பெயரில், மின்கம்பம் சின்னத்தின் கீழ் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
மதுசூதனனை ஆதரித்து நாளைமுதல் ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன் தற்போது ஃபேஸ்புக்கில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக்கின் முதல் பதிவாக சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி எனவும், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இணைந்து செயல்படுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.