
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையோட்டி அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வேட்பாளர் மதுசூதனனுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனை பந்தக்கால் பூமி பூஜை விழா ஒ.பி.எஸ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான ஆர்.கே.நகர் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா, அதிமுக அம்மா, திமுக, பா.ஜ.க, என பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஆர்.கே.நகரில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒ.பி.எஸ் தரப்பில், மதுசூதனன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக சார்பில் மருதுகணேஷை ஆதரித்து எ.வ.வேலு களமிறங்கி உள்ளார்.
இதைதொடர்ந்து மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா தரப்பு ஏற்கனவே நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில், சசிகலா தரப்பினர் சார்பில் பணிமனை பொறுப்பாளர்களாக செஞ்சி ந.ராமச்சந்திரன், நல்லுசாமி, தாமோதரன், உள்பட மேலும் 18 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் சார்பில் மதுசூதனனுக்காக ஒ.பி.எஸ் தலைமையில், தலைமை தேர்தல் பணிமனைக்கான பந்தகால் பூமி பூஜை நடைபெற்றது.
இதில், மைத்ரேயன் எம்.பி, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொன்னையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.