தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையை மாற்ற முடிவு : புதிய தலைவர் பற்றி கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை!

First Published Mar 26, 2017, 6:02 PM IST
Highlights
new leader for tamilnadu bjp


இந்தியாவையே, பாரதிய ஜனதா கட்சி ஆண்டாலும், தமிழத்தை பொறுத்தவரை  தலையால் தண்ணீர் குடித்தாலும், ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. 

பெரிய கட்சிகள்தான், பாரதிய ஜனதாவை தீண்டத்தகாத கட்சியாகப் பார்க்கிறது என்றால், தேமுதிக போன்ற சிறிய கட்சிகள் கூட கூட்டணி சேர மறுக்கிறதே என்ற வருத்தமும் தலைமைக்கு உள்ளது.

கடந்த தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பலர், பலமுறை சந்தித்தும், விஜயகாந்தை கூட மசிய வைக்க முடியவில்லையே என்று கூனிக் குறுகுகிறது பா.ஜ.க.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், சிறிய கட்சிகள் கூட பா.ஜ.க வை சீண்ட மறுப்பதற்கு, மாநில தலைவர் தமிழிசைக்கு மாநிலத்தில்  செல்வாக்கு இல்லாததே காரணம் என்று கட்சி மேலிடம் நினைக்கிறது.

அதனால், சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனேயே  தமிழக பா.ஜ.க தலைவராக உள்ள தமிழிசையை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று மேலிடம் முடிவு செய்திருந்தது.

எனினும், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல், ஜெயலலிதாவின் இறப்பு போன்ற காரணங்களால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று அதிரடி அரசியலும், கூட்டணி அமைக்கும் சாதுரியமும் கொண்ட  தலைமை தமிழகத்திற்கு தேவை என்று தலைமை விரும்புகிறது.

அப்படிப்பட்ட தலைமை இருந்தால் மட்டுமே, தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியும். தமிழிசைக்கு அப்படி ஒரு சாதுரியம் இல்லை. வானதி சீனுவாசனாலும் அதிரடி அரசியல் செய்ய முடியாது.

அதனால், பரபரப்புக்கு பெயர் பெற்ற கருப்பு முருகானந்தம் கூட தமிழக தலைவர் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இது ஒரு புறம் இருக்க, இலங்கை தமிழர், தமிழக மீனவர், மீத்தேன், ஹைடிரோ கார்பன், நதிநீர் பிரச்சினை, மொழி விவகாரம் என மத்திய அரசின் அனைத்து அணுகு முறையும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே உள்ளது.

அதனால், இங்குள்ள மக்களுக்கு அடையாளம் தெரிந்த ஒரு சில பா.ஜ.க  தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கு ஆதரவாக மக்கள் மன்றத்தில் வாதாடவே நேரம் சரியாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழிசை அல்ல, எந்த இசை தலைமையேற்றாலும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றுவதும், கூட்டணி அமைப்பதும் பகீரத பிரயத்தனம்தான்.

திராவிடக் கட்சிகளின் வரவால்,  தேசிய கட்சிகளை, தமிழகம் புறக்கணித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. 

தமிழர்களின் உணர்வு ரீதியான பிரச்சினைக்கும், வாழ்வாதார பிரச்சினைக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா என எந்த தேசிய  கட்சியாலும், எந்த காலத்திலும் தீர்வு காண முடியாது.

அதுவரை, யாரை தலைவராக நியமித்தாலும், இங்கே பாரதிய ஜனதா கட்சியால் காலூன்றுவது இயலாத காரியம் என்றே சொல்ல வேண்டும்.

இருக்கும் கொஞ்ச நஞ்ச தொண்டர்களையும் விரட்டவேண்டும் என்று நினைத்தால், சுப்பிரமணியன் சாமியை, தமிழக பா.ஜ.க தலைவராக நியமித்து, அவர் இஷ்டத்திற்கு பேசாவிட்டால் போதும்.

சுப்பிரமணியன் சாமியும், தமிழக  பாரதிய ஜனதா தலைவராக வருவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!