
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக கொடி, பெயர், சின்னம் என எதுவுமே பயன்படுத்தாத நிலையில், இப்போதாவது திமுக ஜெயிக்குமா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று வரை வெற்றி சின்னமாகவே கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆர் காலத்தில், தொடர்ந்து வெற்றியை கொடுத்து வந்த இரட்டை இலை சின்னம், ஒரேயொரு உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே சறுக்கலை சந்தித்தது.
ஜெயலலிதா காலத்தில், இரட்டை இலை சின்னம் சில தோல்விகளை சந்தித்தாலும், பல தடவை பிரம்மாண்டமான வெற்றிகளை வாரிக் கொடுத்துள்ளது.
எனவே, இரட்டை இலை சின்னம் என்பது திமுகவை பொறுத்தவரை எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.
ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம், சசிகலா அணி, பன்னீர் அணி அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. தீபாவும் அதிமுக ஓட்டுக்களை பங்குபோட்டுக் கொள்ள களமிறங்கி உள்ளார்.
இதுபோன்ற ஒரு அருமையான சந்தர்ப்பம், திமுகவிற்கு வாய்ப்பது அரிது. ஆனாலும், இந்த சூழ் நிலையிலும் திமுக வெற்றிபெறுமா? என்ற சந்தேகம் கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தினகரன் தரப்பில் தண்ணீரென பீய்ச்சி அடிக்கப்படும் பண மழையும், பன்னீருக்கும், தீபாவுக்கும் ஆதரவாக குவியும் மக்களும் அந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
திமுகவில் மட்டும் பணத்துக்கு பஞ்சமா என்ன? அதை கொடுக்கும் மனத்துக்குதான் பஞ்சம் என்கின்றனர் மக்கள்.
திமுக மாவட்ட செயலாளர்களிடமிருந்து மட்டும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓட்டுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் 2 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியும். ஆனால், ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாம்.
ஆனால், தினகரன் தரப்பில் பணத்தோடு தங்கமும் கொடுக்கப்பட உள்ளதாகவும், அமைச்சர் ஒருவரின் பினாமி நடத்தும் தொலைக்காட்சி அலுவலகத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால், கொட்டவேண்டியதை கொட்டி தட்ட வேண்டிய வெற்றியை தட்டுவது மட்டுமே தினகரனின் லட்சியமாக உள்ளது.
மறுபக்கம், சீட் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்ட சிம்லா முத்து சோழனும், மறைமுகமாக தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகவேதான், அதிமுகவின் சின்னம், கொடி, பெயர் எதுவுமே இல்லை. இப்போதாவது திமுக ஜெயிக்குமா? என்று வலைத்தளங்கள் வரை மீம்ஸ்கள் வலம் வருகின்றன.