
இந்தியாவை சிதறடிக்க வேண்டும் என்பதே அமித் ஷாவின் நோக்கம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் பாதயாத்திரை
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சமையல் சிலிண்டர் விலையைக் குறைக்கக் கோரியும், அதன் விலைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையிலிருந்து சென்னைக்கு 18 நாட்கள் பாத யாத்திரை நடைபெறுகிறது. கோவையில் பாத யாத்திரையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தப் பாத யாத்திரை நிகழ்ச்சி மிகவும் முக்கியம். இது ஒரு கொள்கை ரீதியிலான நடை பயணம் ஆகும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை இந்த நடை பயணம் மூலம் விளக்கி சொல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிக்கு நிபந்தனை
காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஜி.எஸ்.டி என்பது ஒரு வரிதான். அதுவும் குறைவான வரியாகும். ஒரே வரி குறைவான வரி என்பதன் மூலம் அதிக வரி வருமானம் கிடைக்கும். வரியைக் குறைவாக விதித்து அனைவரையும் வரி கட்ட வேண்டும் என்ற சூழலை உருவாக்க அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், பாஜக ஆதரிக்காதால் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் வெற்றி பெறவில்லை. பின்னர் ஆட்சிக்கு வந்த பாஜக, ஜிஎஸ்டியை கொண்டு வந்தனர். வரி 18 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது, அதிகமான வரிவிதிப்பு முறை இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டிக்கு ஆதரவளித்தோம்.
மொழிக் கொள்கை
ஆனால், பாஜக அரசு பின்னர் அந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை. இதனால் மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. நாட்டின் வருமானமும் குறைந்து போனது. தற்போது மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். அலுவல் மொழியாக, பாட மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற செயல் திட்டத்தை இந்தியாவின் முன்பு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்திய எல்லையில் உள்ள மக்கள், எந்த மொழியை பேசிகிறார்ளோ அதை பேசலாம். அதுதான் நம்முடைய மொழி கொள்கை. ஆங்கில ஆட்சி மொழி எப்போது முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. இந்தி மொழி பேசாத மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அமித்ஷா நோக்கம்
அந்த மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டுக்கு வழங்கினார். இதை அப்போது மக்கள், எதிர்கட்சிகள் ஏற்றுக் கொண்டதால், இந்தியா ஒரே நாடாக உள்ளது. நம்முடன் சேர்ந்து விடுதலையான பாகிஸ்தான் இன்று இரண்டாக பிரிந்துவிட்டது. இந்தியாவையும் இதுபோல் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் நோக்கம். நாம் மொழிக் கொள்கையில் தெளிவான நிலையிலேயே இருக்கிறோம்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.