
நயினார் நாகேந்திரன் மற்றும் துரைசாமி ஆகியோருக்கு பாஜகவில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற முயற்சி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் பாஜகவுக்கு என்ற தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாகவே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனாலும் அதில் எதிர்பார்த்ததை விட பாஜக பரவலாக வெற்றியைக் கண்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் பாஜக அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளி இரண்டாவது இடம் பெற்றது. இது அக்கட்சிக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கம்போல மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பாஜகவின் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற உள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
அந்த அடிப்படையில் நாளை பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்று கட்சியில் இருந்து வந்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாற்றுக் காட்சியிலிருந்து வந்த சீனியர் லீடர்கள் விபி துரைசாமி, நயினார் நாகேந்திரன் போன்றவர்களுக்கு அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் பாஜகவில் சமீபத்தில் வீதி துரைசாமி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புதிய பொதுச் செயலாளர்கள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் வரக்கூடிய 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர் கொள்ளக்கூடிய வகையில் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் விபி துரைசாமி தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என பொது மேடையிலேயே அதிருப்தி தெரிவித்திருந்தார். அதேபோல திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்து மீண்டும் பாஜகவிலிருந்து கு.க செல்வம் விலகினார். கட்சியில் முக்கிய பதவிகள் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிதாகவும் அதிருப்தி இருந்து வருகிறது. இந்நிலையில் கட்சியை நோக்கி வருபவர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இன்னும் பலரை காட்சியை நோக்கி ஈர்க்கும் வகையிலும் முக்கிய பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.