
சசிகலாவிற்கு அதிர்ச்சி தந்த தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தும், அதிமுக சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்கள் உருவாக்கப்பட்டும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் சசிகலா உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி சட்ட விரோதம் என்று உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இதனை எதிர்த்து ஓபி்ஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கூறியது. சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு சசிகலாவை அதிர்ச்சி அடைய செய்தாலும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சசிகலா கூறினார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை
இந்த தீர்ப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சட்ட ரீதியாக சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்சாகத்தில் உள்ளனர். இந்தநிலையில் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளனர். மேலும் சட்ட ரீதியாக சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக சசிகலா எடுக்கும் நடவடிக்கைக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உட்கட்சி தேர்தல் ஆலோசனை
மேலும் கடந்த வாரம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலையிடுவதாகவும் பிரச்சனை எழுப்பப்பட்டது. இதன் காரணமாக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கூட்டத்தில் இருந்து கோபத்தில் வெளியேறி சென்றார். இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று அதிமுக தலைமையகத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.