அதிமுக-திமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும்... ஓபிஎஸ் நீர்த்துப்போய் விட்டார்.. கே.பி முனுசாமி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2022, 5:55 PM IST
Highlights

தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக-திமுக மட்டுமே களத்தில் நிற்கும் என்றும், திமுக அதிமுக பங்காளிகள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக-திமுக மட்டுமே களத்தில் நிற்கும் என்றும், திமுக அதிமுக பங்காளிகள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரையில் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின் கீழ் இயங்கிவந்த அதிமுகவில், தற்போது ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இதற்கு பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 23 ஆம் தேதி நடந்த முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைக் தலைமையாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நீதிமன்ற உத்தரவால் அது தடைப்பட்டது. இந்நிலையில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: திமுகவிற்கு எடப்பாடியார் மறைமுக உதவி.. அதிமுக அலுவலக ஊழியர்களுக் சம்பளம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்.

இந்நிலையில் அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையின்கீழ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது, இச்சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி முனுசாமி தற்போதைய அதிமுக நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஏ,பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார், இன்று பொதுக்குழு தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, அதில் பொதுக்குழு நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை தலைவர்கள் புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும், ஆனால் மாறாக ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது பொதுக்குழு கூட்டமல்ல.? இபிஎஸ்யின் புகழ் பாடும் கூட்டம்..! மாவட்ட செயலாளர் விமர்சனம்

அதில் எந்த முன்னறிவிப்புமின்றி ஒற்றை தலைமை குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதால், கட்சி தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர், தொண்டர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது என கூறியுள்ளார். உண்மையிலேயே கட்சித் தலைவராக உள்ள அவர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர் பொதுக்குழுவை நடத்தக்கூடாது எனக் கூறுகிறார். கட்சித் தலைவரே கட்டுப்பாட்டை மீறி செயல்படலாமா? கட்சியின் கொள்கைகளை மீறி நீதிமன்றத்திற்கு செல்கிறார், கட்சி விதிகளைமீறி உயர்நீதிமன்றத்திற்கு சென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது கட்சியின் விதி, இப்படிப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் படிவங்களில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என 70% செயற்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார், ஆளுநர் மாளிகையில் திமுக தலைவருடன் ஓபிஎஸ் தேனீர் அருந்துகிறார், சட்டப்பேரவையில் பேசும்போது கருணாநிதியின் பராசக்தி வசனத்தை இன்னும் பெட்டியில் வைத்திருப்பதாகவும் கூறுகிறார். அவரது மகன் முதலமைச்சரை சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறுவதையும் அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை, தமிழகத்தில் பல கட்சிகள் நாங்கள்தான் எதிர்க்கட்சிகள் என கூறிக் கொள்ளலாம், ஆனால் அதெல்லாம் எடுபடாது. திமுக அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் நாங்கள் பங்காளிகள் ஆனால் பகை எப்போதும் இருக்கும்.

இந்த பகை தீர்ந்து போகும் வகையில் செயல்பட்டால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் நீர்த்துப் போய் விட்டார், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் பேசி ஒத்துழைப்பு  இல்லாததால்தான் ஒன்றிய தலைமை அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முனுசாமி பேசியுள்ளார். 
 

click me!