
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு சொகுசு அறைகளும் ஒதுக்கப்பட்டன. தூங்குவதற்கு வசதியாக தனி கட்டில்கள் வழங்கப்பட்டன.
டி.வி. வசதி, வக்கீல்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க சிறை அதிகாரி அறை அருகே தனி அறை, வெளியில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய வசதிகள் சசிகலாவுக்கு வழங்கப்பட்டன.
இதைதொடர்ந்து சசிகலாவும், இளவரசியும் சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்த வீடியோ காட்சிகள் வைரலாகியது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்க மேலதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை டிஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சிறையில் விதிமுறை மீறல்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழுவினர் விசாரணை நடைபெற்றது.
அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என்றும், அவர்களுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வினய்குமார் விசாரணை நடத்தியபோதே சசிகலா, இளவரசி ஆகியோர் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். தற்போது சசிகலா 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்து முதலாவது மாடிக்கு மாற்றப்பட்டு உள்ளார். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளும் நிறுத்தப்பட்டது. ஜெயிலில் உள்ள உணவுகளையே சசிகலா சாப்பிடுகிறார்.
வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுவரை சசிகலா, இளவரசி ஆகியோர் வழக்கமான உடைகளையே அணிந்து வருகிறார்கள். விரைவில் அவர்களுக்கு வெள்ளை நிற சீருடை வழங்கப்பட உள்ளது.
மொத்தத்தில் வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார்.