அடகவுளே.. மீண்டும் ஒரு வெள்ள அபாயம்..!! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.!!

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2020, 11:38 AM IST
Highlights

ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் இன்று 12 மணி அளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் இன்று பகல் 12 மணிக்கு ஏரியை திறக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படும் என்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் 25. 51 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடி ஆகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தற்போது வடகிழக்கு பருவ மழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தாளும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளபடியால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயரும் போது அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர்வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். தற்போது இன்று 25-11-2020 இன் படி 22 அடியை நெருங்குவதாலும், ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4,027 கன அடியாகவும் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் இன்று 12 மணி அளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர் வரத்திற்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும்.  

எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம்  வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், தென்னக ரயில்வே பொது மேலாளர், கொசஸ்தலை ஆறு  உதவி செயற்பொறியாளர், சேப்பாக்கம் மண்டலம் தலைமை பொறியாளர், பாலாறு வடிநிலம் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 

click me!