உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த டிடிவி.!

By vinoth kumarFirst Published Oct 1, 2021, 5:12 PM IST
Highlights

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தித் துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.

கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளின் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே வைப்பதற்கு ஏற்கெனவே மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. தற்போது, 3 மற்றும் 4-வது அணு உலைகளின் அணுக்கழிவுகளையும், இங்கேயே வைப்பதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதற்கு திமுக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தித் துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இப்படி ஓர் அணுக்கழிவு மையம் அமைவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

click me!