அண்ணாமலை குறித்து பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை - அதிமுகவின் தீர்மானத்திற்கு பாஜக கண்டனம்..

By Ramya s  |  First Published Jun 13, 2023, 3:46 PM IST

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று பாஜக தெரிவித்துள்ளது. 


பாஜக மாநிலத் துணை தலைவர் கரு.நாகராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. தமிழகத்தில் அண்ணாமலையின் பேச்சுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அண்ணாமலை மீது அதிமுகவினர் பொறாமையில் உள்ளனர்.

ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழக மக்களின் இதயக்கனியாக விளங்கும் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசுகின்றனர். இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அண்ணாமலை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிப்பார் என நினைத்தேன். ஆனால், இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

Latest Videos

undefined

ஜெயலலிதா மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால் அவரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர்கள், எங்கள் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு செய்வதும், அவரின் செயல்பாடுகளை குறை சொல்வதை நாங்கள் கண்டிக்கிறோம். இதை நாங்கள் எதிர்க்கிறோம். வருத்தப்படுகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜக உதவியது. திமுகவுக்கு வாய்ப்பான சூழலை அதிமுக உருவாக்கி வருகிறது. என்று தெரிவித்தார்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதாக தெரிவித்ததே இந்த சர்ச்சைக்கு காரணம். ஆனால் ஜெயலலிதாவை மறைமுகமாக அண்ணாமலை குறிப்பிட்டதாக அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி சண்முகம் ஆகியோர் கடுமையாக எதிர்வினையாற்றினர். இந்த சூழலில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் அதிமுக – பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

click me!